ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ள கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை மட்டுமல்ல, அவை கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய தேசிய காங்கிரஸ் என்பது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான ஒரு வரலாற்றுப் பெரும் இயக்கம் என்றும், இதன் பாரம்பரியம் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறுவதை விடுத்து அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பமாகச் செயல்படுவதாகவும், அதன் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் தலைமையின் கீழ் கட்சி மிகவும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும், காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் காங்கிரஸ் கட்சி உறுதியாகப் பின்பற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் பேசிவிட்டு எளிதில் தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம் எனவும், இது போன்ற கருத்துகளுக்குக் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
