தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் முழுமையாகத் தோல்வியைத் தழுவும் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கணித்துள்ளார்.

மேலும் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள அவர், ஜெயலலிதா காலத்தில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்தார். ஆனால், தற்போதைய சூழலில் அதிமுக பலமிழந்து காணப்படுவதால், அந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு இருக்காது என அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கருணாஸ், மற்ற கட்சிகளின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இறுதியில் பாஜக தனது முத்திரையைப் பதிப்பதாகக் குற்றம் சாட்டினார். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திற்கு மட்டும் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் எந்தத் தொகுதியில் தாம் போட்டியிடப் போகிறோம் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.