தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடிகர் கருணாஸ் தலைமையிலான ‘முக்குலத்தோர் புலிப்படை’ மற்றும் தமிமுன் அன்சாரி தலைமையிலான ‘மனிதநேய ஜனநாயக கட்சி’ ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த இரு கட்சிகளுமே திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்கீடு குறித்து திருப்தி தெரிவித்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாகவும், எந்தத் தொகுதி என்பது குறித்து நாளை இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸும் திமுக கூட்டணியில் இணைந்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
