கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம், நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபரும், வடகராவைச் சேர்ந்த இளம்பெண்ணும் எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் மூன்று பேர் கதவைத் தட்டியுள்ளனர்.

தங்களை ‘போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள், சோதனையிட வேண்டும் எனக் கூறி அறைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் திடீரென காதலர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த தங்க வளையல், 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டுதப்பினர்.

பாதிக்கப்பட்ட காதல் ஜோடி அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், போலீஸ் போல நடித்து கொள்ளையடித்தவர்கள் அமல், பவன் மற்றும் தாமஸ் சாக்கோ என்பது தெரியவந்தது.

உடனடியாகச் செயல்பட்ட போலீசார், தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி போலீசார் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.