தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் அவர்களுக்குத் தேர்தல் ஆலோசனைகளை வழங்கவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று‌ முதல் மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நேற்று கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் 100 சதவீத வெற்றியைப் பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, மேற்கு மண்டலம் தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

கோவையில் தனது பயணத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து ஈரோடு மற்றும் கரூருக்குச் சென்று இளைஞரணி கூட்டங்களில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, மார்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, பாளையங்கோட்டை மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

தற்போது தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.