தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கலந்து கொண்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.
மேலும் தனது தொகுதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த உதயநிதி, நேர்காணல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகத் தெரிவித்தார். நேர்காணலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள், நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் மற்றும் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அனைத்து விவரங்களையும் தான் விரிவாக விளக்கியதாகவும், அதற்கு “யோசித்து முடிவு செய்கிறோம்” என்று தலைமை தரப்பில் பதில் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலை எதிர்கொள்ள திமுக முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், இந்த நேர்காணல் நிகழ்வு அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
