பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையுடன் விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையதளங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘லோக் கல்யாண் மார்க்கில்’ ஒரு சிறுவனுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் பதிவில், “லோக் கல்யாண் மார்க்கிற்கு வந்த ஒரு சின்ன சிநேகிதனுடன் சில நிமிடங்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த எளிய மற்றும் அன்பான புகைப்படம் வெளியான குறுகிய காலத்திலேயே 17 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அவர் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவருமான கிருஷ்ணகுமாரின் பேரன் நியோம் அஸ்வின் கிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது.
View this post on Instagram
பாஜக தலைவர் கிருஷ்ணகுமார் தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். அந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே பிரதமர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த மென்மையான பக்கத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம், அரசியல் எல்லைகளைக் கடந்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
