உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று பொய் கூறி இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கோவாவிற்கு அழைத்துச் சென்று விற்க முயன்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் மகளுக்குத் தகுந்த வரன் தேடி சமூக வலைதள வாட்ஸ்அப் குழுவில் விளம்பரம் செய்திருந்தனர். இதைப் பார்த்த எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த பிரீதம் குமார் நிஷாத் என்பவர், தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், தற்போது மாணிக்பூரில் பணியாற்றி வருவதாகவும் கூறி அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டார்.

குடும்பத்தினரை நம்ப வைக்க, தான் அலுவலகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள், அரசியல் தலைவர்களுடன் இருக்கும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகள் போன்ற போலி வீடியோக்களை அவர் அனுப்பியுள்ளார். மேலும், தனக்கு வரதட்சணை வேண்டாம், நல்ல பெண் இருந்தால் போதும் எனக் கூறி அந்த குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதை உண்மை என நம்பிய பெண்ணின் பெற்றோர், திருமணத்திற்குச் சம்மதித்தனர்.

நிச்சயதார்த்தத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவசரச் செலவு எனக்கூறி ரூ. 15 லட்சம் பணத்தைக் கேட்டுள்ளார் பிரீதம். அதன்படி, நிச்சயதார்த்தத்தன்று ரூ. 10 லட்சமும், திருமணச் சடங்குகளின் போது ரூ. 5 லட்சமும் ரொக்கமாகப் பெற்றுள்ளார். “எனக்கு அடிக்கடி பணிமாற்றம் (Transfer) ஆகும் என்பதால் இப்போது வீட்டுச் சீர் வரிசைகள் எதுவும் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம்” எனக்கூறி சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி கோரக்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சுமார் ரூ. 30 லட்சம் செலவில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணப்பெண், பிரீதமுடன் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற பிறகுதான், அவர் கூறியது போல அது பங்களா அல்ல, ஒரு சிறிய ஒற்றை அறை வீடு என்பது தெரியவந்தது. இது குறித்துக் கேட்டபோது, “இது தற்காலிகமானது, விரைவில் அரசு பங்களா கிடைத்துவிடும்” என மழுப்பியுள்ளார்.

சந்தேகமடைந்த மணப்பெண் தனது குடும்பத்தினருக்குத் தகவல் அளித்தார். அவர்கள் விசாரித்தபோது, பிரீதம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே இல்லை என்பதும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்பதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “தன்னை கோவாவிற்கு அழைத்துச் சென்று விற்க பிரீதம் திட்டமிட்டிருந்ததாகத்” தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் அவரது வீட்டிற்குச் செல்வதற்குள் பிரீதமும் அவரது சகோதரியும் தப்பியோடிவிட்டனர். இவர் ஏற்கனவே இதுபோல பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்திருக்கலாம் என அப் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள பிரீதமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வரன் தேடுபவர்கள், சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.