உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் 18 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பிரதாப்கர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஷன் (எ) முன்னா. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மிஷ்ர்பூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. இவருக்கு கிஸ்மதுல் நிஷா மற்றும் அம்பியா பானோ என இரண்டு மனைவிகள் உள்ளனர். இருவருடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த குல்ஷனுக்கு, தலா 9 குழந்தைகள் வீதம் மொத்தம் 18 குழந்தைகள் உள்ளனர்.
இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தபோதிலும், குல்ஷனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முறையற்ற உறவு இருந்துள்ளது. அவ்வப்போது குடும்பத்தை விட்டு பிரிந்து சுமனுடன் குல்ஷன் தங்கி வந்துள்ளார். இவர்களது உறவுக்கு சுமனின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையின்படி, கடந்த மார்ச் 18-ஆம் தேதி சுமன் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வருமாறு குல்ஷனை அவர் அழைத்துள்ளார். குல்ஷன் அங்கு சென்றதும், சுமனின் தந்தை மற்றும் சகோதரர்கள் இரும்புத் தடிகளால் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். தலையில் பலத்த காயமடைந்த குல்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஆதாரங்களை மறைக்க, அவரது உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி அருகில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர்.
குல்ஷன் மாயமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். குல்ஷனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக சுமனிடம் பேசியது உறுதியானது. இதையடுத்து சுமனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
மேலும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவருக்கு 18 குழந்தைகள் இருந்ததும், அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டதும் அந்தப் பகுதியில் பெரும் பேச்சாக உள்ளது. இந்த வழக்கில் சுமனின் தந்தை மற்றும் சகோதரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
