இந்திய ரயில்வேயின் மனிதாபிமானமிக்க மற்றும் துரிதமான செயல்பாடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, ரயில்வே நிர்வாகம் மின்னல் வேகத்தில் மருத்துவ உதவி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பல் மருத்துவரான தாய் ஒருவர், தனது குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது குழந்தைக்கு ‘முருங்கைக்காய் சூப்’ கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறிது நேரத்திலேயே குழந்தைக்குத் தொடர் வாந்தி ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரயிலில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் (TTE) உடனடியாக உதவி கோரினர்.

தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரயில்வே ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டனர். முதலுதவி மருந்துகள் தயார் செய்யப்பட்ட அதே வேளையில், அடுத்த ரயில் நிலையமான ஹிந்துபூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Dr. Bhavna K (@chaos_to_care)

ஆச்சரியப்படும் விதமாக, ரயில் ஹிந்துபூர் நிலையத்தை அடைந்தபோது, அங்கு ஒரு மருத்துவர் தயார் நிலையில் காத்திருந்தார். அவர் உடனடியாக ரயிலுக்குள் வந்து குழந்தையைப் பரிசோதித்து, தேவையான மருந்துகளை வழங்கினார். இந்த முழு செயல்முறையும் மிகவும் நேர்த்தியாகவும், தொழில்முறை ரீதியாகவும் அமைந்ததோடு, மருந்துகளுக்கான ரசீதும் முறையாக வழங்கப்பட்டது. இந்த அனுபவம் குறித்து அந்தத் தாய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: “ஓடும் ரயிலில் இவ்வளவு சீக்கிரம் உதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகுந்த பதற்றத்தில் இருந்த எங்களுக்கு ரயில்வே ஊழியர்களின் செயல்பாடு பெரும் நிம்மதியை அளித்தது. இந்திய ரயில்வேயின் இந்த பொறுப்பான சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் ரயில்வேயின் இத்தகைய மனிதாபிமான சேவையைப் பாராட்டி வருகின்றனர். “நெருக்கடியான நேரங்களில் அடுத்த நிலையத்திலேயே உதவி கிடைப்பது இந்திய ரயில்வேயின் பலம்” எனப் பல பயணிகள் தங்கள் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசல் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், பயணிகளின் உயிர் காக்கும் பணியில் ரயில்வே காட்டும் அக்கறை இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.