ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதையை மீண்டும் திறக்க நட்பு நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்காதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஈரான் தனது போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாக இந்தப் பாதையை மூடியுள்ளதுடன், அங்கு செல்லும் சரக்குக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் தடைபட்டு, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட் , பாக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இது குறித்துக் கூறியதாவது “இந்த வாரம் நான் டொனால்ட் டிரம்புடன் பலமுறை பேசினேன். ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதில் நட்பு நாடுகள் இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காக மற்ற நாடுகளின் உதவியை அவர் கோரியுள்ளார். தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தப் பாதையைப் பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிணைந்து வருகின்றன.

ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்ட மார்க் ரூட், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால், அது இந்தியாவிற்கும் பெரும் நன்மையாக அமையும். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி தடையின்றி கிடைக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் இந்தப் பாதை திறக்கப்படுவது அவசியமாகும். மேலும் ஆரம்பத்தில் ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தொடங்கப்பட்ட இந்தப் போர், தற்போது ‘எரிசக்திப் போராக’ மாறியுள்ளது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.