ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய இந்த மோதலால், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, பல நாடுகளில் பொருளாதார அவசரநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் ஈரானின் நடவடிக்கையால் அமெரிக்கா பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தப் பாதையை மீண்டும் சீரமைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தை நேரடியாக ஜலசந்தியில் களமிறக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ள அமெரிக்கா, “குறிப்பிட்ட நேரத்திற்குள் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் இயங்காவிட்டால், ஈரானின் எரிசக்தித் திட்டங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்க ராணுவம் நேரடித் தாக்குதலை நடத்தும்” எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்:

“ஈரான் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாது. எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமோ அல்லது ஈரானோ இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் மரியாதையான மொழியைப் பயன்படுத்துங்கள். ஹார்முஸ் ஜலசந்தி அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்று குறிப்பிட்ட அரக்சி, போரின் காரணமாக அங்கு நிலவும் அசாதாரண சூழலால் கப்பல்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தத் தயங்குவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ஜலசந்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் எதிரி நாடுகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கப்பல்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்படுகின்றன. எமது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த எவரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், உலக நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளன. அமெரிக்காவின் இந்த 48 மணிநேரக் கெடு முடிவடையும் போது, ஹார்முஸ் ஜலசந்தியில் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.