கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையிலும் தணிந்தபாடில்லை. இந்த மோதலால் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், அமெரிக்காவின் புதிய ‘அதிரடித் திட்டம்’ போரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு திட்டங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதிலிருந்து மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். தவறினால், ஈரானின் எரிசக்தித் திட்டங்கள் மீது அமெரிக்க ராணுவம் மிகக்கடுமையான தாக்குதலைத் தொடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான்,“அமெரி க்கா அத்தகைய நடவடிக்கையில் இறங்கினால், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடுவதோடு, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்” எனத் தெறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் என்.பி.சி நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க அமெரிக்க ராணுவம் நேரடியாகக் களம் இறங்கும். ஈரானின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகும். அங்கு ஈரானின் பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க அமெரிக்கா முயற்சித்தால், அது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். தற்போது அந்தப் பகுதியில் பல நாடுகளின் சரக்குக் கப்பல்கள் சிக்கியுள்ளன. அடுத்த சில மணிநேரங்களில் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அது உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
