அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான் பிரதிநிதி அலி மௌசவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்பில்லாத கப்பல்கள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பாதையில் பயணிக்கலாம். முன்னதாக, இந்தப் பாதையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 22 நாட்களாக இந்தப் பாதை மூடப்பட்டிருந்ததால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் 22 சதவீத எரிவாயுத் தேவை இந்தப் பாதையையே சார்ந்துள்ளதால் சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஏற்றுமதி முடங்கியிருந்தது.

தற்போது ஈரான் இணங்கி வந்தாலும், இந்தப் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போக்குவரத்து மாற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.