பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் அமைதியைக் குலைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அண்டை நாட்டு மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதில் பாகிஸ்தான் ராணுவம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான சதித் திட்டங்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதிக்கக் கூடாது என்று ஆசிம் முனீர் வலியுறுத்தினார்.

மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்ட அவர், எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களின் அர்ப்பணிப்பையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈட்டிய சாதனைகளையும் வெகுவாகப் பாராட்டினார். பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.