ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராபர்ட் பட்டின்சன், தான் நடித்த ‘தி டிராமா’ (The Drama) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தனது சிறுவயது குறும்புத்தனம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது தனது பள்ளிப் பருவம் குறித்துப் பேசிய பட்டின்சன், ஒருமுறை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடலை ஒலிப்பதிவு செய்து கொண்டு சென்றதாகத் தெரிவித்தார். ஆனால், அதைத் தனது தந்தை தான் பாடினார் என்று ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் அவர் கூறியுள்ளார்.

“என் தந்தை ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுத்துக் கொண்டதால் தான் அவரது குரல் மைக்கேல் ஜாக்சன் போல மாறுகிறது” என்று நண்பர்களை நம்ப வைத்ததாகவும், அந்தப் பொய் காரணமாகப் பின்னர் பள்ளியில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் அவர் வேடிக்கையாக நினைவு கூர்ந்தார். தற்போது தனது 2 வயது மகள் குறித்துப் பேசிய அவர், “நான் எந்தப் பொய் சொன்னாலும் என் மகள் உடனே கண்டுபிடித்து விடுவாள்; அவளை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

ஏ24 (A24) நிறுவனம் தயாரித்துள்ள ‘தி டிராமா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிரிஸ்டோபர் போர்க்லி எழுதி இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் டிராமா படத்தில், ராபர்ட் பட்டின்சனுடன் பிரபல நடிகை ஜெண்டயா  இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடியின் நடிப்பு மற்றும் படத்தின் கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ராபர்ட் பட்டின்சனின் இந்த கலகலப்பான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.