ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது.

இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேறு வழியின்றி அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத விநியோகத்திற்காக ஆசிய நாடுகள் மட்டும் சுமார் 6 கோடி பீப்பாய் அமெரிக்க எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளன.

இந்தச் சூழல் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதோடு, அமெரிக்காவிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் லாபத்தையும் தேடித்தந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வந்து சேரக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் எரிசக்தித் தட்டுப்பாடு உடனடியாக நீங்காது. இதன்காரணமாகவே, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா தற்போது தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது.

போரைத் தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முயன்று வரும் வேளையில், எண்ணெய் வர்த்தகத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது.

ஈரானில் தனக்குச் சாதகமான ஆட்சியை அமைப்பதன் மூலம், எதிர்காலத்தில் வெனிசுலாவைப் போல அந்நாட்டின் எரிசக்தி வளங்களை ஆதிக்கம் செலுத்தலாம் என்பதே அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.