மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் இதுவரை இல்லாத ஒரு அதிரடித் திருப்பமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானிலிருந்து சுமார் 4,118 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தளத்தைக் குறிவைத்து இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே செயலிழந்த நிலையில், மற்றொரு ஏவுகணையை அமெரிக்கப் போர்க்கப்பல் எஸ்எம்-3 (SM-3) இடைமறிப்பு ஏவுகணை மூலம் தகர்க்க முயன்றுள்ளது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கத் தளத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், ஈரானின் ஏவுகணைத் திறன் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“>

ஈரானின் வசம் உள்ள அறியப்பட்ட ஏவுகணைகள் எதற்கும் 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கும் வல்லமை இல்லை எனக் கருதப்பட்ட நிலையில், டியாகோ கார்சியாவை ஈரான் எட்டியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ரகசியமாகப் பல மடங்கு அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் ‘மத்திய கட்டளை’ (CENTCOM) பிரிவின் கீழ் மட்டுமே போர் நடந்து வந்த நிலையில், தற்போது இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவின் கீழ் உள்ள பகுதிக்கும் போர் விரிவடைந்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த நீண்ட தூரத் தாக்குதல் முயற்சி, அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட ஒரு மிகப்பாரிய எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.