மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் இருந்து 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலக்கு புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்குப் பொருந்தாது என்றும், ஏற்கனவே கடலில் கப்பல்களில் தேங்கியுள்ள சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும் என்றும் அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக ரஷ்யாவிற்கும் இதேபோன்ற 30 நாள் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஈரானுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேசச் சந்தையில் நிலவும் எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்கி, விலைகளைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயைச் சீனா மட்டும் மலிவான விலையில் பதுக்கி வைப்பதைத் தடுக்கவும், உலக நாடுகளுக்கு அந்த எண்ணெய் தடையின்றி கிடைக்கவும் இந்த ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) உதவும் என அமெரிக்கா கருதுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானின் பொருளாதாரப் பலத்தைக் குறைக்கவும், அதே சமயம் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலையாமல் பாதுகாக்கவும் இந்த ராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை அமலில் இருக்கும் இந்த 30 நாள் விலக்கு, தற்காலிக நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.
