தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் சிறிய கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக இம்முறை 163 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் போன்ற சிறிய கட்சிகளை ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

மறுபுறம், பாஜக தரப்பில் கடந்த முறையை விடக் கூடுதலாக 30 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அதிமுக பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம், இந்தியக் குடியரசுக் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு இணையாக 163 இடங்களில் நேரடியாகக் களம் இறங்குவதன் மூலம், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் இலக்காக உள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அன்புமணி மற்றும் தினகரன் ஆகியோரும் டெல்லி செல்ல உள்ளதால், தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.