தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அரசைத் தான் காப்பாற்றியது தான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
தான் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக நீடிக்க முடிந்தது என்றும், ஆனால் அந்த நன்றிகூட இல்லாமல் தன்னைத் திட்டமிட்டு கட்சியிலிருந்து ஓரங்கட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பதவி ஆசை இல்லாமல் எடப்பாடி பழனிசாமியையே முதலமைச்சராக ஏற்க தான் முன்வந்தும், தன்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க அவர் முயற்சி செய்ததை எதிர்த்தே தான் போராடுவதாக ஓபிஎஸ் விளக்கமளித்தார்.
தொடர்புடைத்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நலத்தைக் கூட பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகப் பாராட்டினார்.
நிறுத்தப்பட்ட அம்மா லேப்டாப் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் மீண்டும் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பதாகவும் சாடினார்.
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
