வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி போட்டியிடுவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் மாநில அரசியலில் முக்கியப் பங்காற்ற விரும்புவதாகவும், அதற்கான காய்நகர்த்தல்களை அவரது ஆதரவாளர்கள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனிமொழி எம்.பி., சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகவும் உறுதியாக உள்ளனர். இதன் வெளிப்பாடாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என, கட்சி மேலிடத்தில் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த முறை தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அவர் பெற்ற பெரும் வெற்றி, அந்தப் பகுதியில் அவருக்கிருக்கும் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அங்கேயே சட்டமன்ற உறுப்பினராகி, மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ஏற்பது அவரது திட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கனிமொழியின் இந்த ‘மாநில அரசியல் பிரவேசம்’ முதலமைச்சர் குடும்பத்தினரிடையே ஒருவிதத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணங்களாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.

அதாவது தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், எதிர்காலத்தில் கட்சியின் ஒருமுகப்படுத்தப்பட்ட தலைமையாக உருவெடுக்க வேண்டும் என்பதே குடும்பத்தின் விருப்பமாக உள்ளது. கனிமொழி மாநில அரசியலுக்குள் நுழையும் பட்சத்தில், அது அதிகாரப் பகிர்வில் சிக்கல்களை உருவாக்கலாம் என அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

டெல்லி அரசியலில் திமுகவின் முகமாக இருக்கும் கனிமொழி, சென்னைக்குத் திரும்பினால் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இரண்டு மையங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதானமான போக்கையே கடைபிடித்து வருகிறார். கனிமொழியின் விருப்பத்திற்கு இப்போதே ‘பச்சைக்கொடி’ காட்டாமல், காலதாமதம் செய்வதன் மூலம் அவரது முடிவை மாற்றவோ அல்லது மீண்டும் நாடாளுமன்றப் பணிகளுக்கே அவரைத் திருப்பவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

“கனிமொழிக்கு தென் மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு திமுகவிற்குப் பலம் என்றாலும், அது கட்சிக்குள்ளேயே ஒரு போட்டித் தலைமையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் தலைமைக்கு இருக்கிறது. இதனால் 2026 தேர்தலில் சீட் ஒதுக்கீடு என்பது கனிமொழிக்கு அத்தனை எளிதாக இருக்காது.

மேலும் கலைஞரின் வாரிசாக, கட்சிப் பணிகளில் தீவிரமாக இருக்கும் கனிமொழிக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது தேசிய அரசியலிலேயே அவர் தொடர வலியுறுத்தப்படுவாரா என்பது, தேர்தல் நெருங்கும் வேளையில் முதலமைச்சர் எடுக்கும் முடிவிலேயே உள்ளது.