திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தற்காலிக பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விசிக செயல்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நேரலை வாயிலாகத் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்துப் பகிர்ந்து கொண்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு,

“திமுக கூட்டணியில் நமக்கு 10 தொகுதிகளுக்கும் குறைவாகவே இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கட்சியில் நீண்டகாலமாக உழைத்து வருபவர்கள் பலரும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளே கிடைப்பதால், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது. கடந்த காலங்களில் மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகள் கிடைத்தபோது நாம் சுதந்திரமாக வேட்பாளர்களைத் தேர்வு செய்தோம். ஆனால், தற்போதைய சூழல் வேறாக உள்ளது.

சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், “கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதைவிடக் கூட்டணி நலன் முக்கியம். விசிக மட்டும் தனியாக வளர நினைக்கவில்லை; ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்தே வளர்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் மையம் நம்மைச் சுற்றியே இருக்கும் என்பதை வருங்காலம் நிரூபிக்கும்,” எனத் தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், மாற்று கூட்டணிகள் குறித்துப் பேசுகையில், தற்போது வரை கூட்டணி வலுவாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் எத்தனை தொகுதிகள் என்பது உறுதியாகத் தெரியவரும்.

ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மைதான், ஆனால் அதில் எவ்வித இழுபறியும் இல்லை. ஒரு காலத்தில் போயஸ் கார்டனை நோக்கி அனைவரும் வந்த நிலை மாறி, தற்போது டெல்லியைத் தேடிச் செல்லும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக அமைந்துள்ள கூட்டணிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தொகுதிப் பங்கீட்டில் விசிக பெருந்தன்மையோடு நடந்து கொள்வதாக மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.