பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் நண்பரையே படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதான்ஷு குமார் என்பவரை அவரது முன்னாள் நண்பரான விகேஷ் பாஸ்வான் என்கிற மலிங்கா என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்துக் கொலை செய்துள்ளார்.

சட்டவிரோத மது வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுதான்ஷு குமாரின் கால்களைத் துண்டித்த கொலையாளிகள் பின்னர் அவரது தலையைத் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். அந்தத் தலையைத் ஒரு வாளின் நுனியில் சொருகி ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியது அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைக்குப் பிறகு உடலையும் தலையையும் வெவ்வேறு இடங்களில் புதைத்த கொலையாளிகள் எவருக்கும் சந்தேகம் வராதபடி அந்த நிலத்தைத் டிராக்டர் கொண்டு உழுது சாட்சியங்களை மறைக்க முயன்றுள்ளனர். காணாமல் போன கணவரைத் தேடி வந்த சுதான்ஷுவின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கணவரின் கையில் இருந்த கருப்புக் கயிறு மற்றும் ஆடைகளை வைத்து அவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி உறுதிப்படுத்தினார்.

கொலையாளிகள் சுதான்ஷுவின் உறவினர்களுடன் அமர்ந்து துக்கம் விசாரிப்பது போல நடித்து போலீசாரை திசைதிருப்ப முயன்றனர். இருப்பினும் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் முக்கியக் குற்றவாளியான மலிங்கா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமானவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.