டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 3 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்; காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜேந்திர கஷ்யப்பின் குடும்பத்தினர் என்பதால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முக்கியத் தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.இந்த விபத்து குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது விபத்தல்ல, ஒரு கொலை என்று கூறிய அவர்கள், தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் தாமதமாக வந்ததாகவும், அவர்களிடம் ஏணி மற்றும் பாதுகாப்பு வலை போன்ற அடிப்படை வசதிகள் கூட சரியாகச் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மக்களின் கண் முன்னாலேயே 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், இந்தக் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
