உலகளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 127-ஆக இருந்த நிலையில், தற்போது 2024-ல் அது 26.6-ஆகக் குறைந்துள்ளது.
அதாவது, சுமார் 79 சதவீதம் வரை இந்த இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது இந்தியாவின் சிறப்பான மருத்துவ முன்னேற்றத்தைக் காட்டுகிறது.குறிப்பாக, 2000-ஆம் ஆண்டில் 1,000 குழந்தைகளுக்கு 92 பேர் உயிரிழந்த நிலை மாறி, தற்போது அந்த எண்ணிக்கை 32-ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் இந்தத் தொடர்ச்சியான முயற்சி, மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளும் முறையான சுகாதாரத் திட்டங்கள் மூலம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று ஐ.நா சபை பாராட்டியுள்ளது.
