உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவாவில் உள்ள சைஃபி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Saifai Medical University) மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண் ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 40 வயது பெண், கடந்த 2025 ஜூன் 14-ஆம் தேதி முதல் சைஃபி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மனநலப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் ஓராண்டு காலமாக அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கடும் அதிர்ச்சியில் உறைந்தது. மனநலப் பிரிவில் பலத்த பாதுகாப்பில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவலம், மருத்துவமனை பாதுகாப்புக் குறித்தப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மனநலத் துறைத் தலைவர் டாக்டர் அருண் குமார், கடந்த மார்ச் 19, 2026 அன்று சைஃபி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றி வந்த ரவீந்திர குமார் என்ற துப்புரவுப் பணியாளருக்கு இதில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. பகேவர் பகுதியைச் சேர்ந்த அவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி (CO) ராம்கோபால் சர்மா கூறுகையில், “மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிக்கிய துப்புரவுப் பணியாளர் ரவீந்திர குமார் மீது உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.
மேலும் மருத்துவமனையில் பாதுகாப்பில் இருந்த மனநல நோயாளிக்கே நேர்ந்த இந்தச் சீரழிவு, உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
