நாசிக் நகரின் முக்கியப் பகுதியில் ‘ஓகாஸ் பிராப்பர்ட்டி டீலர்ஸ்’ என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்த 67 வயதான அசோக் காரட் என்ற போலி ஜோதிடர், ஆன்மீகப் போர்வையில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் மெர்ச்சன்ட் நேவி அதிகாரியான இவர், தன்னை ஒரு ‘கேப்டன்’ என்றும், தெய்வீக சக்தி கொண்டவர் என்றும் கூறி அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

தன்னிடம் உதவி தேடி வரும் பெண்களைத் தன் வசீகரிக்கும் பேச்சால் கட்டிப்போட்டு, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், பெண்களின் கணவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டியும், பில்லி சூனியப் பயத்தைக் காட்டியும் இந்த அநீதியைத் தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளார்.

போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், அந்தப் போலி ஜோதிடரின் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் 58 பெண்களின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல் டெல்லி வரை உள்ள அரசியல் புள்ளிகளுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

“திருடன்.. திருடன்..” என சத்தமிட்டு நாடகமாடி நள்ளிரவில் போலீசார் இவரைக் கைது செய்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வினி சத்புதே தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அடிபடுவதால் மகாராஷ்டிர அரசியலில் கடும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.