மும்பை பாண்டுப் பகுதியில், தனது மனைவியை கள்ளக்காதலன் வீட்டில் கையும் களவுமாகப் பிடித்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை, அந்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  46 வயது நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது 38 வயது மனைவி, கடந்த சில காலத்திற்கு முன்பு தனது மாமியாரின் தங்க நகைகளைத் திருடிய புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர் தனது கணவருடன் வசிக்காமல் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது சச்சின் வசந்த் கார்கே என்பவருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கணவருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கணவர் கேட்டபோது மனைவி அதனை மறுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று (மார்ச் 16), இரவு 10 மணியளவில் மனைவி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் கணவர் எழுந்து பார்த்தபோது, மனைவியைக் காணவில்லை. அவர் சச்சின் வீட்டிற்குத்தான் சென்றிருப்பார் எனச் சந்தேகித்த கணவர், உடனடியாக சச்சின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். பதில் ஏதும் வராததால் கதவை உதைத்துத் திறந்து உள்ளே சென்றபோது, அங்குத் தனது மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் அங்குக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சச்சின் அந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேறச் சொல்லியுள்ளார். கணவர் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, சச்சின் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது முதுகில் சரமாரியாகக் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேறு  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாண்டுப் போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட சச்சின் வசந்த் கார்கேவை பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.