இன்ஸ்டாகிராமில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, மாய மந்திரம் மற்றும் ‘ஜின்’ (Jinn) வசியத்தின் மூலம் வாழ்க்கையை வளமாக்க முயன்ற மும்பை இளம்பெண் ஒருவர் ரூ.15.93 லட்சத்தை இழந்துள்ளார். மும்பை சீயான் (Sion), பிரதீக்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து  கொண்டிருந்தபோது, ‘Powerful Obsession Healer’ என்ற பக்கத்தைப் பார்த்துள்ளார்.

ரெஹான் என்பவரால் நடத்தப்பட்ட அந்தப் பக்கம், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் மற்றும் காதல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இலவச ஆலோசனைகளை வழங்குவதாகக் கூறியிருந்தது. ஆர்வத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது, அது ஷாஹித் மற்றும் சாஹில் என்பவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளது.

தொடக்கத்தில் அந்தப் பெண்ணின் பிறந்த தேதி மற்றும் ராசியைக் கேட்ட மோசடி கும்பல், அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும், அதை அடைய சில சிறப்புத் தந்திர பூஜைகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆசை காட்டியுள்ளனர். முதலில் மறுத்த அந்தப் பெண்ணை, 2023 அக்டோபரில் மீண்டும் தொடர்பு கொண்ட கும்பல், “எங்களிடம் ஒரு ‘ஜின்’  இருக்கிறது, அது உங்கள் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும். பெரும் செல்வம், புகழ் மற்றும் நல்ல காதலைத் தேடித் தரும்” என மூளைச்சலவை செய்துள்ளனர்.

இதை நம்பிய இளம்பெண், முதல் பூஜைக்கு ரூ.25,000 கொடுத்துள்ளார். அதன் பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி அந்த கும்பல் சிறுகச் சிறுகப் பணத்தைப் பறிக்கத் தொடங்கியது. தன்னிடம் இருந்த சேமிப்பு முழுவதையும் இழந்த அந்தப் பெண், மோசடி கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து, தன் குடும்பத்தினர் வைத்திருந்த தங்க நகைகளை விற்றும் அந்தப் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். 2023 அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரை நடந்த இந்தத் தொடர் மோசடியில், அந்தப் பெண் மொத்தம் ரூ.15,93,980 இழந்துள்ளார்.

எந்த அதிசயமும் நடக்காததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இறுதியில் சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ல் புகார் அளித்தார். சீயான் போலீஸார் மற்றும் சைபர் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் செல்போன் எண்களை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

“சமூக வலைதளங்களில் மந்திரம், வசியம் அல்லது அமானுஷ்ய சக்திகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.