ஜெய்ப்பூர் நகரின் முக்கியப் பகுதியான 200 அடி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திருநங்கைகள் போல் வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக, 200 அடி சாலைப் பகுதியில் திருநங்கைகள் போல் உடையணிந்த சிலர், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை மறித்து ஓட்டுநர்களைத் தொந்தரவு செய்வதாகவும், மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, ஏசிபி அனில் சர்மா தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ஒரு கும்பலைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட 9 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அவர்களில் ஒருவர் மட்டுமே உண்மையான திருநங்கை என்பதும், மீதமுள்ள 8 பேரும் இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் திருநங்கைகளைப் போல வேடமிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கர்னி விஹார் பகுதியில் உள்ள புரா படேல் மார்க்கில் தங்கியிருந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:

  1. சந்திரபால் (எ) ரௌனக் / சைலேந்திரா (மத்தியப் பிரதேசம்)

  2. மோனு கோத்தி (மத்தியப் பிரதேசம்)

  3. சஞ்சனா (எ) சூரஜ் அரோரா (உத்தரப் பிரதேசம்)

  4. ரவி ஜாதவ் (எ) பிரதிக் ஜாதவ் (மத்தியப் பிரதேசம்)

  5. சோட்டி (எ) யோகேந்திர சிங் (உத்தரப் பிரதேசம்)

  6. விருந்தா (எ) பக்சந்த் காதிக் (அஜ்மீர்)

  7. வேத்பிரகாஷ் வியாஸ் (பிகானேர்)

  8. ராமாவதார் (எ) ராணி (உத்தரப் பிரதேசம்)

  9. மற்றும் ஒரு திருநங்கை.

மேலும் கைது செய்யப்பட்ட இந்த 8 வாலிபர்களும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதுவரை இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மற்றும் இவர்கள் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.