அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் நேரடிப் போரைத் தவிர்க்க விரும்பினாலும் அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பயங்கரவாத அமைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நெருக்கடிகளை உருவாக்கி வருவதாகவும் அதற்குப் பஹல்காம் தாக்குதல் ஒரு முக்கிய உதாரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் ஏவுகணைகள் அமெரிக்காவைத் தாக்கும் அச்சுறுத்தலும் இருப்பதாக அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரமாக முயன்று வருவது சர்வதேச பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்குப் போட்டியாகத் தலிபான்கள் தங்களது பாதுகாப்புப் பணிகளைப் பலப்படுத்திப் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை எல்லைத் தாண்டிய பயங்கரவாதத் தூண்டுதல்கள் மோதலுக்கான காரணியாக அமையக்கூடும் என்பதால் உலக நாடுகள் இந்தப் பகுதியை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. அமெரிக்க உளவுத்துறையின் இந்த மதிப்பீடு ஆசிய நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
