மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முற்றியுள்ள மோதலால் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 2,019 புள்ளிகள் சரிந்து 74,685 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 597 புள்ளிகள் சரிந்து 23,180 என்ற நிலையை எட்டியது. இந்த அதிரடி வீழ்ச்சியால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலும், அதற்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலும் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த போர் சூழலால் இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளும் சரிவைக் கண்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உலக நாடுகளுக்கு இடையே நிலவும் இந்த அரசியல் பதற்றம் தணிந்தால் மட்டுமே சந்தை மீண்டும் சீராகும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.