ஈரான் – அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையைத் துருக்கி கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தும், தனது மண்ணில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கவோ அல்லது எரிபொருள் நிரப்பவோ துருக்கி இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காப்பதன் மூலம், இந்த மோதலில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள துருக்கி முயல்கிறது.

ஒருவேளை அமெரிக்காவிற்கு உதவினால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளைப் போல ஈரானின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தப்போருக்கு இஸ்ரேலே காரணம் என்று கருதும் துருக்கி அதிபர் எர்டோகன், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பாதுகாப்பான இடமாகத் தேடியே அமெரிக்கா துருக்கியை நாடியது.

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்பதால் அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் என்பதே அமெரிக்காவின் கணக்கு. ஆனால், ஓமானுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள துருக்கி, ஈரானை பகைத்துக் கொள்ள விரும்பாமல் வான் பாதுகாப்பு அமைப்புகளை மட்டும் நிலைநிறுத்தித் தனது பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.