சீனா மற்றும் ஈரான் இடையிலான ராணுவ உறவு பலமடைந்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிப்பிற்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் போன்ற முக்கிய எரிபொருள் மூலப்பொருட்களைச் சீனா பெருமளவில் வழங்கி வருகிறது.

குறிப்பாக, 2026 மார்ச் மாத தொடக்கத்தில் சீனாவின் துறைமுகத்திலிருந்து ராக்கெட் எரிபொருட்களுடன் ஈரானியக் கப்பல்கள் புறப்பட்டதும், அதற்கு முன்னதாக 1,000 டன் எரிபொருள் பொருட்கள் அனுப்பப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஈரானின் தாக்குதல் திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்த ராணுவக் கூட்டாண்மையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சீனா தனது ‘பெய்டூ’  செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை ராணுவ ரீதியாகப் பயன்படுத்த ஈரானுக்கு முழு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஈரான் தனது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் துல்லியமாக இலக்கு வைக்க முடியும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் மூலம் இரு நாடுகளும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றன. சர்வதேசக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, சீனா இப்போது ஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்கி வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.