ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் இப்போது உலகத்தையே உலுக்கும் ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் உளவுத்துறை அமைச்சரான இஸ்மாயில் காதிப் (Esmail Khatib), இஸ்ரேல் நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சருடன் சேர்த்து அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகிய முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். “என் அருமை சகாக்களைக் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்துவிட்டனர்” என எக்ஸ் (X) தளத்தில் அதிபர் பெசெஷ்கியான் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆத்திரத்தையும் பதிவு செய்துள்ளார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அடுத்தடுத்த இழப்புகள் ஈரான் அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’ (IRGC) மூலம் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முற்றிலும் முடக்கியுள்ளது. உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதத்தை இந்த வழித்தடம் சுமந்து செல்லும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மற்றொரு பக்கம், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “இன்று இன்னும் பல குறிப்பிடத்தக்க ஆச்சரியங்கள் அனைத்து முனைகளிலும் காத்திருக்கின்றன” எனப் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் எப்போது என்ன நடக்கும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
