மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மூத்த தலைவரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவருமான அலி லாரிஜானி (வயது 67) இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இழப்பாக இது பார்க்கப்படுகிறது.

ஈரானின் ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அலி லாரிஜானி டெஹ்ரான் நகருக்கு வெளியே வசிக்கும் தனது மகளைச் சந்திக்கச் சென்றிருந்தார். அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேலிய உளவுத்துறை, அவர் இருந்த இடத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் லாரிஜானியுடன் சேர்ந்து அவரது மகன் மொர்தேசா லாரிஜானி, அலுவலக அதிகாரி அலி ரேசா பயாத் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்களும் உயிரிழந்தனர். இந்தத் தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் அரசியலில் ‘நம்பர் 2’ தலைவராகக் கருதப்பட்ட லாரிஜானி, வெறும் ராணுவ அதிகாரி மட்டுமல்ல, சிறந்த அறிஞராகவும் போற்றப்பட்டார். ஷெரிப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் தங்கப் பதக்கம் வென்றவர். மேற்கத்திய தத்துவவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். குறிப்பாக, ஜெர்மன் தத்துவஞானி இமானுவேல் காண்ட்டின் கோட்பாடுகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கடந்த 2008 முதல் 2020 வரை தொடர்ந்து மூன்று முறை ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பதவி வகித்தார். கடந்த ஆகஸ்ட் 2025-ல் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலராக அதிபர் மசூத் பெசெஷ்கியால் நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார்.

அவருக்குப் பிறகு அவரது மகன் முஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் வியூகங்களை வகுப்பதில் அலி லாரிஜானியே மூளையாகச் செயல்பட்டு வந்தார். தற்போது அவரும் கொல்லப்பட்டிருப்பது ஈரானின் ராணுவக் கட்டமைப்பிற்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் நஜாப் நகரில் 1958-ல் பிறந்த லாரிஜானி, கமேனியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகத் திகழ்ந்தார். இவரது மறைவு ஈரானின் அதிகார மையத்தில் ஈடுகட்ட முடியாத ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.