இயந்திரங்கள் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோ ஒன்று தட்டு முட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது சான் ஜோஸ் நகரில் உள்ள ‘ஹைதிலாவ்’ என்ற பிரபல உணவகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக ‘சூட்டோபியா’ (Zootopia) எனும் டிஸ்னி திரைப்படக் கதாபாத்திரத்தின் உருவத்தில் ஒரு ரோபோ வைக்கப்பட்டிருந்தது. ஆரஞ்சு நிற ஏப்ரான் அணிந்திருந்த அந்த ரோபோ, திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்தது.
தனது உலோகக் கைகளை அங்கும் இங்கும் வீசி, அங்கிருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை அடித்து நொறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர் ஒருவர், அந்த ரோபோவை பின்னால் இருந்து கட்டிப்பிடித்துக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனாலும் அந்த ரோபோ அடங்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Incident Report:
Employee: Robot.
Infraction: Unauthorized dancing and smashed dishes.
Staff required to contain: Several.
Reason given: He just wants to dance.
The robot has no regrets.pic.twitter.com/MUATJfhvIq
— Mario Nawfal (@MarioNawfal) March 17, 2026
“ரோபோவுக்கு போதை ஏறிவிட்டது, அதை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்” என ஒருவர் கிண்டலடித்துள்ளார். “இயந்திரங்கள் இதுபோல் ரகளையில் ஈடுபடும்போது, அதை உடனடியாக நிறுத்த அதன் தலையிலேயே ஒரு ‘எமர்ஜென்சி ஸ்டாப்’ பட்டன் வைத்திருக்கலாமே?” என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். “இன்னும் சில ஆண்டுகளில் இதுபோன்ற பல விசித்திரமான சம்பவங்களை நாம் பார்க்க நேரிடும்” எனத் தொழில்நுட்ப ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து ஏஐ சாட்பாட் (AI Chatbot) மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு ரோபோ என்றும், நடனமாடும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இயங்கியதால் இந்த ரகளை ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின் போது உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் சிலர் அலறி ஓடிய நிலையில், சிலர் இந்த விசித்திரக் காட்சியைத் தங்களது செல்போன்களில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
