இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மரணமடைந்து விட்டதாகவும், அவருக்குப் பதிலாக ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உருவம் உலா வருவதாகவும் பரவிய வதந்திகளுக்கு, நெதன்யாகு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து பல்வேறு காட்டுத்தீ போன்ற வதந்திகள் பரவின. குறிப்பாக, ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிந்ததாகவும், எனவே அவர் உண்மையான நெதன்யாகு அல்ல, ஒரு போலி உருவம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்த வதந்திகளை வேடிக்கையான முறையில் முறியடிக்க நெதன்யாகு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு சிற்றுண்டிச் சாலையில் (Café) காபி அருந்தியபடி பேசிய அவர், தனது இரு கைகளையும் கேமராவிற்கு முன்னால் நீட்டி, “என் விரல்களை நீங்கள் எண்ண வேண்டுமா? இதோ இங்கே பாருங்கள்… இங்கேயும் பாருங்கள்,” என்று கூறி வதந்தி பரப்புபவர்களின் வாயை அடைத்தார். மேலும், எபிரேய மொழியில் நகைச்சுவையாக “நான் காபிக்காக செத்துக்கொண்டிருக்கிறேன்” (அதாவது காபி மீது மிகுந்த விருப்பம் கொண்டவன்) என்றும் குறிப்பிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கீயுடன் (Mike Huckabee) இணைந்து மற்றொரு வீடியோவை நெதன்யாகு வெளியிட்டார். அதில் மைக் ஹக்கீ நகைச்சுவையாக, “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று நேரில் பார்த்து வர அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்னை அனுப்பினார்” என்று கூறினார். அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த நெதன்யாகு, “ஆமாம் மைக், நான் உயிரோடுதான் இருக்கிறேன்,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

வெறும் வதந்திகளுக்குப் பதிலளிப்பதுடன் நிற்காமல், ஈரானின் முக்கியத் தலைவர்களான அலி லாரிஜானி உள்ளிட்டோர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும் அவர் பேசினார். ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்க இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகவும், அதற்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் தோன்றுவதன் மூலம், தான் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்பதையும், தனக்குப் பதிலாக யாரும் மாற்றப்படவில்லை என்பதையும் நெதன்யாகு உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.