ஈரான் மீதான போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தனது ராஜினாமா கடிதத்தில் அதிபர் ட்ரம்பிற்கு ஜோசப் கென்ட் எழுதியுள்ள உருக்கமான மற்றும் அதிரடியான தகவல்கள் பின்வருமாறு, இஸ்ரேலிய உயர் அதிகாரிகளும், அமெரிக்க ஊடகங்களில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களும் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ட்ரம்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டால் அமெரிக்காவிற்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை. ஆனால், இஸ்ரேலிய லாபிகளின் அழுத்தத்தால் தேவையற்ற போருக்குள் அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஈராக் போரின் போது அமெரிக்காவை எப்படி இஸ்ரேல் உள்ளே இழுத்ததோ, அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.
45 வயதான ஜோசப் கென்ட், அமெரிக்க சிறப்புப் படை மற்றும் சிஐஏ (CIA) பிரிவில் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஆவார். இவரது மனைவி ஷானன் கென்ட், கடற்படையில் கிரிப்டோலாஜிக் நிபுணராகப் பணியாற்றியவர். 2019-ல் சிரியாவில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய கென்ட், “இஸ்ரேலால் தூண்டப்பட்ட போரில் எனது மனைவியை இழந்த ஒரு ‘கோல்ட் ஸ்டார்’ கணவனாக, அடுத்த தலைமுறை வீரர்களைப் பலிகொடுக்க என்னால் சம்மதிக்க முடியாது” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜோசப் கென்ட்டின் ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர் என்று நான் நினைத்தேன். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் அவர் மிகவும் பலவீனமானவர். ஈரானால் அச்சுறுத்தல் இல்லை என்று அவர் கூறுவதிலிருந்தே அவர் பதவியை விட்டு விலகுவதுதான் நல்லது என்பது புரிகிறது,” என்றார்.
மேலும் ஈரான் – இஸ்ரேல் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் வேளையில், அமெரிக்காவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவரே இஸ்ரேலுக்கு எதிராகக் போர்க்கொடி தூக்கிப் பதவிலகியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
