ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க தூதரகம் இலக்கு வைக்கப்பட்டது மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர்களான பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் பசிஜ் (Basij) படைத் தளபதி குலார்சா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ‘கிளஸ்டர்’ குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் தலைவர்களின் மரணத்திற்குப் பழிவாங்காமல் விடமாட்டோம் என ஈரான் சூளுரைத்துள்ளது.
இந்தநிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் அருகே வந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று துபாய் மற்றும் தோஹா நகரங்களில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா-வுக்கான ஈரான் தூதர் ஆமிர் சயீத் கூறுகையில், இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மனித உரிமை அமைப்பான HRANA இந்த எண்ணிக்கை 1,858 ஆக இருக்கலாம் என அஞ்சுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவாத நேட்டோ (NATO) நாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரச உடன்படிக்கையும் செய்துகொள்ளப் போவதில்லை என ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய முயன்ற இரு நாடுகளின் கோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். மேலும் இதற்கிடையில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் லெபனானில் இதுவரை 773 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
