மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. இந்தச் சூழலில், ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள சீனா, தற்போது லெபனானுக்கும் உதவி செய்ய முன்வந்துள்ளதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய கமாண்டர் குலாம்ரேசா சுலைமானி மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை அழிக்க நினைப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ள நிலையில், “நிச்சயமாக இதற்குப் பழிவாங்குவோம்; இஸ்ரேலுக்குப் பாடம் புகட்டுவோம்” என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பிற நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது மறைமுகமாக உலக நாடுகளைப் போருக்குள் இழுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்த விவகாரத்தில் சீனா எடுத்துள்ள முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைச் செய்ய சீனா முன்வந்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு ஏற்கனவே நிதியுதவி அளிப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என சீனா கடுமையாகச் சாடியுள்ளது.
மேலும் தொடக்கம் முதலே ஈரானுக்குச் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனா, தற்போது லெபனானுக்கும் உதவப் போவதாக அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளால் மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா அல்லது போர் உலகப்போராக உருவெடுக்குமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
