ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் விக்ரம் வர்மா, ஓமானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்காக ஓமான் சென்ற விக்ரம், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மார்ச் 14 அன்று இந்தத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடல் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. குடும்பத்தின் ஏழ்மையை மாற்ற வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்ற ஒரே மகனை இழந்து அந்தத் தம்பதியினர் தவித்து வருவது கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் எதிரொலிக்கும் நிலையில், இது போன்ற தாக்குதல்கள் அங்கு வேலை செய்யும் இந்தியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. விக்ரம் இறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி, தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இதே போன்று ஏவுகணைத் தாக்குதலில் பலியான நிலையில், இப்போது விக்ரமின் மரணமும் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.