விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது இந்த அநாகரீகமான பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர், பொதுமேடையில் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது ஒட்டுமொத்த தமிழகப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று அவர் சாடியுள்ளார்.
மேலும், சி.வி.சண்முகம் தனது பேச்சுக்காகத் தமிழ்நாட்டுப் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவரது தேர்தல் போட்டியிடும் உரிமையைத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கே.பாலபாரதி வலியுறுத்தியுள்ளார். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, சினிமா நடிகையை இழுத்து வக்கிரமாகப் பேசிய சி.வி.சண்முகத்தின் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
