தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக-வின் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் தற்போது மக்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு ‘காட்டாட்சி’ நடைபெற்று வருவதாகவும், நாள்தோறும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சா புழக்கமே முக்கியக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ₹5,000 கொடுத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என திமுக நினைப்பதாகவும், அவர்களின் இந்த ஆணவத்திற்கு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் பேசினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிவைத்துத் தாக்கிய டிடிவி தினகரன், “அதிமுக ஆட்சியில் அனைத்துப் பதவி சுகங்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது தனது முகவரியை மாற்றிக்கொண்டு திமுக பக்கம் சாய்ந்துள்ளவர்களின் அரசியல் எதிர்காலம் முற்றிலுமாகக் காணாமல் போகும்” என்று சாடினார். திமுகவின் பண அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்றும், இந்தத் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
