அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் தனது பெயர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் ஹிமாயனி புரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி மற்றும் அனில் அம்பானி உள்ளிட்ட சில முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

அதே வேளையில் ஹிமாயனி புரிக்கும் அந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகச் சில பதிவுகள் பகிரப்பட்டன. இத்தகைய தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவை திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் சமூக வலைதளப் பதிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ள ஹிமாயனி புரி பத்து கோடி ரூபாய் இழப்பீடு கோரி இந்த மானநஷ்ட வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஜெப்ரி எப்ஸ்டீன் அல்லது அவரது சட்டவிரோதச் செயல்களுடன் தமக்கு எவ்வித நிதி ரீதியான அல்லது தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர்களின் நற்பெயரைச் சிதைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற அவதூறுகள் சட்டப்படி தண்டனைக்குரியவை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இச்சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.