உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியப் பொறியாளரின் மகனான நைதிக் குமார் என்ற அந்த மாணவர் தனது நண்பர்களுடன் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

 

சாலையில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதுடன் சாலைத் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த கோர விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சக நண்பரின் கேமராவில் பதிவாகி இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகப் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.