புனே மாவட்டம், சாக்கன் (Chakan) அருகே உள்ள அம்பேதான் சௌக் பகுதியில், தெருநாய்கள் கூட்டம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 32 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் ஷோபா வாகமரே (32). இவர் திங்கள்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக இருந்த 6 முதல் 7 தெருநாய்கள் ஷோபாவைச் சூழ்ந்துகொண்டு திடீரெனத் தாக்கியுள்ளன.

தன்னைத் தற்காத்துக்கொள்ள ஷோபா அங்கிருந்த கற்களைக் கொண்டு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், நாய்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. நாய்கள் அவரது கை, கால், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையாகக் கடித்துள்ளன. இந்த கொடூரத் தாக்குதலில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by civicmirror (@civicmirrorpune)

செவ்வாய்க்கிழமை காலை அப்பெண்ணின் உடல் ஆடைகள் கிழிந்த நிலையில், சிதைந்த கோலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்தப் பதிவுகளில், நாய்கள் கூட்டம் அப்பெண்ணை வேட்டையாடியது தெளிவாகத் தெரிந்ததையடுத்து, இது நாய்களின் தாக்குதலால் நிகழ்ந்த உயிரிழப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

 நகரின் பல பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் நலனை முன்னிட்டு, தெருநாய்களைக் கட்டுப்படுத்த நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாலுகா நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.