மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அரசு பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற துறைத் தலைவர் ராஜாபாவ் லொந்தே என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் 40 நாட்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முதல் காணாமல் போன இவரைப் பற்றி அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் லொந்தே தனது நண்பர்களுடன் பண்ணை வீட்டில் மது அருந்தியதும் பின்னர் அவர்களுடன் வெளியே சென்றதும் தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் லொந்தேவின் நண்பரான விஷால் ரத்தோடு என்பவரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரித்தபோது தொடக்கத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துத் தப்பிக்க முயன்றார்.
இருப்பினும் லொந்தேவின் அலைபேசியில் தவறான ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலைப் பதிவைக் கண்ட காவல்துறையினருக்குச் சந்தேகம் வலுத்தது. ஒரு பேராசிரியர் இவ்வளவு தவறான மொழியில் பதிவிட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் தங்களது பாணியில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதில் லொந்தேவை அவரது நண்பர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு உடலைக் காட்டுப் பகுதியில் குழிதோண்டிப் புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட 3 நபர்களைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலையும் அதனை மறைக்கச் செய்த தந்திரங்களும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
