சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி மயானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் துயரமான நேரத்தில் சரவணனின் மகன் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தந்தையை இழந்த சோகத்தில் செய்வதறியாது திகைத்த அந்த மாணவனை உறவினர்கள் தேற்றி அவருக்கு உறுதுணையாக நின்றனர்.

தந்தையின் இறுதிச் சடங்குகளை மன உறுதியுடன் முடித்த அந்த மாணவர் உடனடியாகத் தனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்காகப் புறப்பட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மாணவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிங்கம்புணரி பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில் அந்த மாணவனைத் தனது காரில் அழைத்துச் சென்று சரியான நேரத்தில் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டார்.

தந்தையின் மறைவுக்கு இடையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு எழுதச் சென்ற மாணவனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.